பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: மிகவும் முக்கியமான நேரத்தில் புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும். இந்த காங்கிரஸ் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன.

பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்.

குற்றங்களை விசாரிக்க வேண்டிய மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசியலமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர் இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

பாஜக பதிலடி: இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அசிங்கமான உண்மை, அவர்களது கட்சித் தலைவராலேயே அம்பலம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசை எதிர்த்துப் போராடுகிறார் என்பதை தெளிவாகச் சொன்னதற்காக ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன். ராகுல் காந்தி கூறிய அனைத்தும், நமது இந்தியாவை பிளவுபடுத்தி, நமது சமூகத்தைப் பிரிக்கும் வகையில் இருந்தன. பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஒரு தனி வரலாற்றைக் கொண்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.