இந்தியாவுக்கு சாதகமான முக்கிய நடவடிக்கையாக 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். டெல்லி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்திய அணுசக்தி நிறுவனங்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தடுக்கும் விதிமுறைகளை அமெரிக்கா நீக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாபா அணுசக்தி ஆய்வு மையம், இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம் மற்றும் இன்டியன் ரேர் எர்த்ஸ் என்ற பொதுத்துறை சுரங்க நிறுவனம் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 16 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தான நிலையில், அதை செயல்படுத்துவதை எளிதாக்கும் வகையில் ஜோ பைடன் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட நவீன எரிசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை இந்த நடவடிக்கை நீக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையே 3 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 2005 ஜூலையில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.