ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“உண்மைதானே… 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க 9 தொகுதிகளையும், தி.மு.க 13 தொகுதிகளையும் கைப்பற்றின. அ.தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், நியாயமாகத் தேர்தல் நடைபெற்றதற்கு இதுவே சான்று. ஆனால், தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஆளுங்கட்சி தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தல்களில் அராஜகம் செய்யும். எடுத்துக்காட்டாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தொகுதி மக்களைக் கால்நடைகளைப்போலப் பட்டியில் அடைத்த கொடுமையை நாம் கண்டோம். அதேபோல, கொள்ளையடித்துச் சேர்த்த பண பலத்தை வைத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவார்கள் தி.மு.க குண்டர்கள். அதை, பொம்மை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் நாடக மாடல் ஸ்டாலின் ஆட்சியில், நியாயமான இடைத்தேர்தலை எதிர்பார்க்க முடியாது. தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்ற காரணத்தால், இந்தத் தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கிறது. இவை அனைத்துக்கும் சேர்த்துவைத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் தி.மு.க-வுக்குத் தக்க பதில் சொல்வார்கள்!’’

சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க

“தோல்வி பயத்தில் பிதற்றுகிறார் பழனிசாமி. அவர் அ.தி.மு.க-வில் அதிகாரத்துக்கு வந்த பிறகு சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே கண்டிருக்கிறார். அ.தி.மு.க-வினர் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். மேலும், உட்கட்சிப் பிரச்னையும் நாளுக்கு நாள் பெரிதாக வெடித்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு பிரச்னைகளைத் தலைமேல் வைத்திருக்கும் பழனிசாமிக்கு, தேர்தலைச் சந்திக்கும் தைரியம் இல்லை. அப்படியே சந்தித்தாலும், மக்கள் அ.தி.மு.க-வை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். இப்போது ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்று இருக்கும் பெயர், நாளை ‘பதினோரு தோல்வி பழனிசாமி’ என்று ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார். அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது அல்லவா… எனவே, சம்பந்தமே இல்லாமல் தி.மு.க-வைக் குறைசொல்லி, தேர்தல் புறக்கணிப்பு நாடகம் ஆடுகிறார். 2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஆடிய அராஜக ஆட்டத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க-வின் இரண்டு பிரிவுகளும் பணத்தையும், பரிசுப்பொருள்களையும் வாரி இறைத்துச் செய்த ஜனநாயகப் படுகொலையால் அங்கு தேர்தலே ரத்தான கதையை மக்கள் அறிவார்கள்!’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.