கர்நாடகா: 'வங்கியில் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை' – 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது சம்பவம்!

Karnataka Bank Robbery: மங்களூரு நகரில் கோடேகர் பகுதியில் உள்ள உல்லாலா கூட்டுறவு வங்கி ஆயுதம் ஏந்திய கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் 10 முதல் 12 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இன்று நண்பகல் 11:30 – 12:30 இடையில் இந்த கொள்ளை நடந்ததாகவும், கொள்ளை கும்பல் நீல நிற ஃபியாட் காரில் தப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் கூறுவதன்படி, 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 5,6 பேர் கொண்ட கும்பல் கை துப்பாக்கி, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியில் பேசிய அவர்கள், அப்போது பணியில் இருந்த நான்கு, ஐந்து வங்கி உழியர்களை மிரட்டி தங்க நகைகள் இருக்கும் பெட்டகத்தை திறக்க வைத்துள்ளனர்.

தோராயமாக 10 முதல் 12 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முழுமையான விவரங்கள் இனிதான் தெரியவரும் என்கின்றனர்.

தங்க நகைகள் (சித்தரிப்பு படம்)

கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பல குழுக்களை அமைத்து கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் கிடைக்கப்பெற்றுள்ள தடயங்கள் மூலம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கின்றனர்.

கொள்ளை நடந்தபோது மங்களூருவில் இருந்த முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தகவல் கிடைத்த உடன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

மேற்கு ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அமித் சிங், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால், போலீஸ் சூப்பிரண்டு என் யதீஷ் அகியோர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

சித்தராமையா

சித்தராமையா பேசியதென்ன?

இது குறித்த அவரது பதிவில், “கோட்டேகர் உல்லாலா கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடைபெற்றதை அடுத்து, மங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பினர்? இவ்வளவு சுங்கச்சாவடிகளைத் தாண்டிவிட்டார்கள், ஏன் உடனடியாக போக்குவரத்தை இறுக்கவில்லை?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அத்துடன், “அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கடுமையான சோதனை செய்யப்பட வேண்டும். நான்கு மாவட்டங்களில் தடுப்புகள் போடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

நேற்றைய தினம் கர்நாடகாவின் பிதார் நகரில் பட்டபகலில் இரண்டு ஆயுதம் ஏந்திய நபர்கள் ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல், பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிவிட்டு 97 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.

24 மணி நேரத்துக்குள் இரண்டாவது கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் அச்சத்திலுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.