சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் பலியான வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்தாண்டு ஜூன் 19 அன்று விஷச்சாராயம் குடித்து 69 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் கைதான சின்னத்துரை, ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்து விட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும், என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வரும் ஜன.23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.