‘காரணமில்லாமல் ஏன் மத்திய அரசை விரோதிக்க வேண்டும்?’ – உமர் அப்துல்லா

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “அவசியமின்றி மத்திய அரசுடன் ஏன் விரோதத்தை வளர்க்க வேண்டும்?” என்று கூறியுள்ளார். ஊடகப் பேட்டியின்போது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.

மத்திய அரசுடனான தனது சமீபத்திய உறவு போக்கு குறித்து விவரித்த அவர், ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவது குறித்தும் வலியுறுத்தினார்.

அந்தப் பேட்டியில் உமர் அப்துல்லா, “கவனியுங்கள் ஒரு தள்ளு முள்ளு வந்தால், அது தவிர்க்க முடியாமல் நடக்கும். ஒருவரை ஏன் விரோதத்துடனேயே அணுக வேண்டும்.

உண்மை என்னவென்றால் நான் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தபோது அவர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள், இது மக்களின் தீர்ப்பு, அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சியை வழிநடத்துவதற்கு முழுமையான ஆதரவும் உதவியும் செய்வோம் என்றனர்.

எனவே விரோதத்துக்கான எந்த ஒரு காரணத்தையும் அவர்கள் வழங்காத போது நான் ஏன் மோதலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?. என்ன நடக்கிறது என்று தொடர்ந்து பார்க்கலாம். ஆனால் அந்தச் சூழல் இன்னும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுடனான கடுமையான அணுகுமுறை வேண்டும் என்று அவரை விமர்சிப்பவர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர், “அது பிரச்சினை இல்லை. அரசியல் என்பது, வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்களைக் கொண்டது. அதனால் என்னுடைய அணுகுமுறையுடன் இணங்க முடியாதவர்களும் இங்கு இருப்பார்கள்.

அவர்கள், தங்களின் அதிர்ஷடத்தை சோதித்துப் பார்த்து இந்த இடத்துக்கு வரட்டும். அப்போது அவர்கள் விரும்பும் வகையில் போர்குணத்துடன் செயல்படலாம். அவர்களின் வழிமுறை என்னுடையதை விட சிறப்பாக இருந்தால், அவர்களுடன் இணைந்து, அவர்கள் வழிமுறை சரி என்னுடைய வழிமுறை தவறு எனச் சொல்லும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

நான் மத்திய அரசுடன் மென்மையான போக்கினை கடைபிடிக்கவில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவது அவர்கள் செய்வதை, பாஜக செய்யும் அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமில்லை.

ஜம்மு காஷ்மீர் முன்னேற வேண்டும், வளர்ச்சி ஏற்படவேண்டும், மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்க, மோதல் போக்குக்கு அவசியம் இல்லாத இடத்தில் நான் அதனை கடைபிடிக்க வேண்டுமா?” என்றார்.

கடந்த ஆண்டு நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்று உமர் அப்துல்லா ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். சமீபத்தில், சோனாமர்க்கில் சுரங்கப்பாதை திறப்பின் போது, பிரதமர் மோடியையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.