Champions Trophy 2025, Virat Kohli: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடர் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கு நினைவுக் கூரத்தக்கது.
விராட் கோலிக்கு கழுத்து சுளுக்கு
அப்படி இருக்க பாகிஸ்தானை, இந்திய அணி பழி தீர்ப்பதற்கு மட்டுமின்றி 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்ற கனவோடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. சமீப காலங்களில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதன் மூலம் தோல்வியில் இருந்து வெற்றி பார்வை திரும்புவதற்கு இந்தியா விரும்புகிறது.
அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஓடிஐயில் அசைக்க முடியாத வீரருமான விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விராட் கோலியின் கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஜன. 23ஆம் தேதி தொடங்க இருக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இல்லையெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதும் கேள்விக்குறியாகிவிடும்.
சாம்பியன் டிராபி இந்திய ஸ்குவாட்
இந்நிலையில், விராட் கோலி ஒருவேளை காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை தவறவிடுகிறார் என்றால் அவருக்கு பதில் கருண் நாயரை தேர்வு செய்து நம்பர் 3இல் விளையாட வைக்க வேண்டும். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றுக்கு இன்னும் இந்திய அணி தனது ஸ்குவாடை அறிவிக்கவில்லை என்பதால் விராட் கோலி இடத்தில் கருண் நாயரை விளையாட வைப்பதும் நல்ல தேர்வாக இருக்கும். அதற்கு மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
விராட் கோலிக்கு பதில் கருண் நாயர் – ஏன்?
தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் விஜய் ஹசாரே 2025 தொடரில் 7 இன்னிங்ஸில் 752 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவரின் சராசரியும் 752 ஆக உள்ளது. அதாவது 6 இன்னிங்ஸ்களில் அவர் நாட்அவுட்டாகும். ஒருமுறை மட்டுமே அவுட்டானார். கருண் நாயர் நம்பர் 3 வீரராக களமிறங்கி 5 சதங்களையும் விளாசி உள்ளார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் அடித்த 88 ரன்கள் மறக்க முடியாத ஒன்றாகும். நல்ல பார்மில் இருக்கும் கருண் நாயர் நம்பர் 3இல் சிறப்பாக விளையாடுவது நல்ல வாய்ப்பு எனலாம்.
துபாய் ஆடுகளங்கள் இவரது பேட்டிங் பாணிக்கு அருமையாக உதவும். இவர் சுழற்பந்துவீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கக் கூடியவர். இவரின் கால்பாடம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும். மேலும், ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதால் கருண் நாயர் வழக்கம்போல் ரன்களை குவிக்கலாம்.
நம்பர் 4 இல் கருண் நாயர்
மேலும், கோலி தொடர்ந்து மோசமான பார்மிலும் இருப்பதால் அவருக்கு பதில் கருண் நாயரை ஒரு போட்டியிலாவது விளையாட வைத்துப் பார்க்கலாம். விராட் கோலி விளையாடினால் கூட நம்பர் 4 பிரச்னையாக இருக்கும் இந்திய அணியில் கருண் நாயர் வந்தால் அந்த பிரச்னை போகவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | உலகிலேயே இரண்டாவது வீரர்.. மாபெரும் சாதனை படைத்த பொல்லார்ட்!