இந்தியாவில் தூய்மையான காற்றை கொண்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களின் சமீபத்திய காற்றுத் தரக் குறியீடு (AQI) ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட அந்தத் தரவுகளில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. சுத்தமான காற்றைக் கொண்ட நகரங்களில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்திருக்கிறது.
நெல்லையில் காற்றின் தரக் குறியீடு 24 ஆக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. தஞ்சையில் காற்றின் தரக் குறியீடு 45. தூய்மையான காற்றின் தரத்தை கொண்ட பட்டியலில், நஹர்லகுன் (அருணாச்சல பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), Chhal (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 302 ஆக உள்ளது.
காற்றின் தர குறியீடு ( AQI)
AQI அளவுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது. 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது என்று கூறப்படுகிறது.
இதுவே 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான காற்று மாசு என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் மிகவும் மோசமான காற்றுமாசு என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் கடுமையான காற்று மாசு என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.