மதுரை: பொது முடக்கத்தின் போது சுய உதவிக் குழுவின் கடனை ரத்து செய்யக்கோரி கரோனா காலத்தில் போராட்டம் நடத்தியதாக 35 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மதுரையைச் சேர்ந்த காந்தி, வீரன் உள்பட 35 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா காலகட்டத்தில் போராட்டம் செய்ததாக தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று காலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த வழக்கை நீண்ட காலம் விசாரிப்பது எந்த பலனையும் அளிக்காது என்பதை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பப்படுகிறது என உத்திரவிட்டார்.