சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ப்ளூட்டோ’ இந்தியாவில் உள்ள வீடுகளில் சோதிக்கப்பட்ட முதலாவது ஒரே உள்நாட்டு ரோபோவாகும். தீவிர சிகிச்சையை அணுகக் கூடியதாக அளிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ப்ளூட்டோவினால் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த தயாரிப்பு, கல்வி ஆராய்ச்சி வெற்றிகரமாக சாமானிய மக்களைச் சென்றடையும் தயாரிப்பாக மாற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (முதன்மை ஆராய்ச்சியாளர்), சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை மற்றும் வேலூர் சிஎம்சி உயிரிபொறியியல் துறை ஆகியவற்றில் பிஎச்டி பெற்ற டாக்டர் அரவிந்த் நேருஜி, சிஎம்சி வேலூர் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தவர்கள். தொழில்நுட்ப பரிமாற்றம், வணிகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு சென்னை ஐஐடி தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி (IC&SR) அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலக டிடிஓ-ஐபிஎம் செல் (TTO-IPM Cell) ஏற்பாடு செய்திருந்தது.
காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய் (multiple sclerosis), பார்கின்சன் நோய், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிறந்த பயனளிக்கிறது.
மறுவாழ்வு மையங்கள், புறநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், பெரிய மருத்துவமனைகள், நோயாளிகளின் இல்லங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த இந்த சாதனம் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். பயனுள்ள அதே நேரத்தில் குறைந்த விலையில் கை மறுவாழ்வுத் தீர்வுகள் கிடைக்கச் செய்வதில் இருந்து வந்த இடைவெளி இதனால் குறைகிறது. விலை குறைவாக இருப்பது மட்டுமின்றி கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக அமைவது உறுதி.
உற்பத்தி செலவைக் குறைத்து, குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் உயர்ந்த செயல்பாட்டை வழங்குவதுடன், மேம்பட்ட மறுவாழ்வை பரந்த அளவில் பார்வையாளர்கள் அணுகக் கூடியதாக இருந்து வருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் என்பதால் சுகாதார நிறுவனங்கள், நோயாளிகள் மீதான செலவைக் குறைத்து பரவலாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் விதமாக, இந்த ரோபோவின் வடிவமைப்பில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், ஆற்றல் திறனுள்ள செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தகவமைப்புத் திறன் பல்வேறு சாதனங்களுக்கான தேவையே இல்லாதபடி செய்துவிடுகிறது. இதன் மூலம் நீடித்த சுகாதார கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
‘ப்ளூட்டோ’ என்பது கையடக்கமான, எடுத்துச் செல்லக்கூடிய ரோபோ ஆகும். தகவமைப்பு உதவி மற்றும் சிகிச்சை விளையாட்டுடன் மேம்பட்ட கை மறுவாழ்வு சிகிச்சையை இது எளிதாக்குகிறது. ஒற்றை இயக்க கருவி, பரிமாற்றக்கூடிய இயந்திர கைப்பிடிகளின் தொகுப்பைப் பயன்படுத்துவதால் மணிக்கட்டு, கை அசைவுகளுக்கான சிகிச்சை எளிதாகிறது. இதன் வடிவமைப்பு பல்துறைத்திறனை உறுதி செய்வதாக உள்ளது. மணிக்கட்டு நெகிழ்வு/நீட்சி, முன் கை நீட்டல்/மடக்கல், கை திறப்பு-மூடுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைப் பயிற்சி செய்ய அனுமதிக்கிறது.
புளூட்டோவின் சிறப்பம்சங்கள்:
- படுக்கை அல்லது சக்கர நாற்காலி அடிப்படையிலான சிகிச்சையை அனுமதிக்கும் சிறிய, எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வீடு- மருத்துவமனைப் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.
- கை செயல்பாடுகளுக்கான பல்வேறு சிகிச்சைக் கருவிகளைக் கொண்ட பிளக்-அண்ட்-டிரெய்ன் (Plug-and-train) செயல்பாட்டுமுறை காரணமாக பயன்பாடு, நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது.
- பிளக்-இன் செயல்பாட்டுடன் கூடிய கியர் அற்ற டிசி மோட்டார் சிகிச்சைக் கருவிகளின் தடையற்ற இணைப்பு- செயல்பாட்டை எளிதாக்குகிறது.
- உயர்தரத்துடன், மலிவு விலையில் உற்பத்திசெய்யப்படுவதுடன் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதை உறுதி செய்கிறது.
- பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, மருத்துவமனைகள், மறுவாழ்வு அமைப்புகள், வீடுகளில் பரவலாக பயன்படுத்த ஏதுவாக உள்ளது.
- பக்கவாதம் அல்லது கை முடக்கம் போன்ற நிலைமைகளுக்கு ஆரம்பகால மறுவாழ்வு நிலைகளை நிவர்த்தி செய்யும் வடிவமைப்பு, விரைவான செயல்பாட்டு முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.