சென்னை: போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் செல்போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகியவற்றை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா தொடங்கி வைத்தார்.
மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் தேசிய இணையவழி சேவை 2.0 மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான ‘சஞ்சார் சாதி’ செல்போன் செயலி திட்டங்களை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கினார்.
இத்திட்டங்கள் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உரிமம் சேவை பகுதி (எல்எஸ்ஏ) கூடுதல் தலைமை இயக்குநர் சியாம் சுந்தர் சந்தக், துணை தலைமை இயக்குநர் எம்.சந்திரசேகர், இயக்குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவு செய்வதன்மூலம், அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நமது பெயர் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தால், அதையும் கண்டறிந்து துண்டித்துவிடலாம்.
செல்போன்கள் தொலையும் பட்சத்தில் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக செல்போன் வாங்கும்போது அது புதிய தயாரிப்பா, அல்லது திருடப்பட்டதா என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோல் தமிழகத்தில் 223 கிராமங்கள் உட்பட நாடு முழுவதும் தொலைத்தொடர்பு இல்லாத 27 ஆயிரம் கிராமங்களில் டிஜிட்டல் பாரத் நிதிமூலம் பிஎஸ்என்எல் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுடன் மற்ற செல்போன் ஆபரேட்டர்களின் சிக்னல்களும் கிடைப்பதற்கான ரோமிங் வசதிகளை ஏற்படுத்த ‘இன்ட்ரா சர்கிள் ரோமிங்’ திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் தேசிய இணையவழி சேவை 2.0 திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 2.7 லட்சம் கிராமங்களுக்கு இணையவழி சேவை வழங்கப்படவுள்ளது. இதில் 90% கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி, பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்படும். சோலார் மூலம் 30 சதவீத செல்போன் டவர்களை பயன்படுத்தவும், ஆப்டிகல் பைபர் இணைப்புகளை தேசிய வலைதளத்தில் மேப்பிங் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கெனவே ஆப்டிகல் பைபர் போடப்பட்ட பகுதிகளில் வேறு ஆபரேட்டர்கள் யாரும் புதிதாக ஆப்டிகல் கேபிள்களை போடவேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இருக்கும் ஆப்டிகல் பைபரையே பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.