தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்ளிலும், நாளை கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19-ம் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 20-ம் தேதி தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 18-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 19-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன. 16-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 13 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ., காக்காச்சியில் 11 செ.மீ., மாஞ்சோலையில் 9 செ.மீ., ராமநாதபுர் மாவட்டம் கமுதியில் 2 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசதம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.