புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் மகா கும்பமேளாவுக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வருகை தர உள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுக்கம் அவர்கள் திட்டமிடுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராட அரசியல்வாதிகளும் திட்டமிடுகின்றனர். இதன் பின்னணியில் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் சந்திக்க இருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலும் காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே, அரசியல் கட்சி தலைவர்களில் முதலாவதாக காங்கிரஸார் மகா கும்பமேளாவுக்கு வருகை தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி., பிரியங்கா காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான இவர்கள் இருவரும் சாதாரண நாட்களில் கும்பமேளாவுக்கு வருகை தர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சிறப்பு நாட்களின் ராஜ நீராடலின் போது கூட்டம் மிக அதிகமாக கூடுவதும் காரணமாக கூறப்பப்படுறது.
தங்கள் வருகையின் போது ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவில் முகாமிட்டுள்ள சில முக்கிய அகாடாக்களின் தலைவர்களிடம் ஆசி பெறுவும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற ஆன்மிக நடவடிக்கைகளால் காங்கிரஸுக்கு பிப்ரவரி 5-ல் நடைபெறும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் பலன் கிடைக்கும் என அக்கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஹரித்துவார் சென்றிருந்தார். தனது குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ராஜ்பால் யாதவின் அஸ்தியை கரைக்க அவர் அங்கு சென்றிருந்தார்.
அப்போது அவர், கும்பமேளாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்த ஏற்பாடுகளை விமர்சித்திருந்தார். அதற்கு உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வரான பிரிஜேஷ் பாதக், “மகா கும்பமேளாவில் புனித நீராடலில் செய்து தம் பாவங்களை அகிலேஷ் கழுவிக் கொள்ள வேண்டும்.” எனப் பதிலளித்திருந்தார்.
அதுபோல், ஆன்மிக செயல்பாடுகளில் விமர்சனங்கள் கூடாது என மாநிலத்தில் ஒரு கருத்து உள்ளது. எனவே, அகிலேஷின் விமர்சனத்தை ஆதரிக்காத வகையில், மகா கும்பமேளாவுக்கான ராகுலின் வருகை இருக்கும் எனக் கருதப்படுகிறது.