மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிவந்தவர்களின் கூற்றுப்படி, மும்பை போலீஸார் பல்வேறு சந்தேக நபர்களை பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவரை பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்காக காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சத்தம் கேட்டு நடிகர் சயிப் அலிகான் எழுந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை அவர் பிடிக்க முயன்றார். அப்போது மர்மநபர் கத்தியால் 6 முறை நடிகர் சயிப் அலிகானை குத்தினார். இதில் சயிப் அலிகானுக்கு பல இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. உடல் முழுவதும் ரத்தம் வடிந்தது.
இதனால் சயிப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராகிம் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர் ஆகியோர் மும்பை பாந்த்ரா பகுதியில் லீலாவதி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொண்டு சென்றனர். அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் அபாய கட்டத்தை தாண்டியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.