புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கோி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜன. 17) நிராகரித்தது. இதையடுத்து, மாற்று நடவடிக்கையாக அவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு அபுபக்கரின் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் MM சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், PFI முன்னாள் தலைவர் அபுபக்கர் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பால் (NIA) கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 28, 2022 அன்று, UAPA விதிகளின் கீழ் PFI அமைப்பை உள்துறை அமைச்சகம் தடை செய்தது.
கைது செய்யப்பட்ட அபுபக்கர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை, விசாரணை நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டன. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அபுபக்கரின் உடல் நிலை குறித்து சரிபார்த்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது. அக்குழு, அபுபக்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் அபுபக்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தனது கட்சிக்காரரின் ஜாமீன் மனுவுக்கு மருத்துவ அறிக்கை சாதகமாக இருப்பதாக வாதிட்டார்.
NIA சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் SV ராஜு, அபுபக்கர் நீதிமன்றக் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் பதிலளித்தார்.
அபுபக்கரை வீட்டுக் காவலுக்கு மாற்றக்கோரிய மனுவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்த்தார். இது நீதிமன்றத்தால் ஊக்குவிக்கப்படக் கூடாத “புதிய கருத்து” என்று வாதிட்டார்.
ஏற்கெனவே தடைசெய்யப்பட்ட அமைப்பான SIMI உடன் அபுபக்கர் தொடர்புடையவர் என்பதும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு.
மதத்துக்காக போர் புரியும் ஜிகாதி படையை இந்தியாவில் வலுப்படுத்தி அவர்கள் மூலம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை தூக்கி எறிந்துவிட்டு, இந்தியாவில் ஷரியத் சட்டம் மற்றும் கலிபாவை நிறுவ PFI சதி செய்ததாக டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.