புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ, அவரது தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி: வழக்கின் பின்னணி என்ன?

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் மேற்பார்வை பொறியாளராகவும், அக்ரோ சர்வீஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனில் பொது மேலாளராகவும் பணியாற்றியவர் சி.ஆனந்தன். இவர் கடந்த 1997 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.75 கோடி அளவுக்கு சொத்துக்குவி்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி ஆனந்தி மற்றும் மகனும், என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது ஆனந்தி மரணமடைந்ததால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.

அதையடுத்து தந்தை, மகன் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்த் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து கடந்த 2018-ல் தீர்ப்பளித்தது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் ஆர். ராஜரத்தினமும், சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். பாஸ்கரனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அரசு அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தன் மற்றும் அவரது மகன் அசோக் ஆனந்த் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சிபிஐ தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்கிறேன். பொதுவாக அரசு ஊழியர்கள் தங்களுக்கான வருமானம், சொத்துகள் மற்றும் கடன்களுக்கு முறையாக கணக்கு காண்பிக்க கடமைப்பட்டவர்கள். புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகளை, குற்றச்சாட்டுக்குள்ளாகும் பொது ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. அதை ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.