புதுடெல்லி: பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலை முன்னிட்டு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இன்று வெளியிட்டார்.
“பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று நட்டா தெரிவித்தார்.
ஜேஜே கிளஸ்டர்களில் ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
“2020-ம் ஆண்டில், நாங்கள் 500 வாக்குறுதிகளை அளித்தோம், அவற்றில் 499 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதாவது, 99.99 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. 2019-ம் ஆண்டில், நாங்கள் 235 வாக்குறுதிகளை உறுதியளித்து 225 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். இது 95.5 சதவீதம். மக்கள் நலன், நல்லாட்சி, மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக அரசு செயல்படும். எங்கள் வாக்குறுதிகள் வளர்ந்த டெல்லிக்கான அடித்தளமாகும். தற்போதுள்ள அனைத்து நலத்திட்டங்களும் தொடரும். அதேநேரத்தில், மக்கள் நலத் திட்டங்களில் நடைபெற்ற அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படும்” என்று நட்டா கூறினார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக முயல்கிறது. 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் முறையே மூன்று மற்றும் எட்டு இடங்களை மட்டுமே பாஜக வென்றது. தலைநகரை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கடந்த இரண்டு தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.