புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் முள் பாபா எனும் துறவி நிருபர் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அவர், படுத்திருந்த முட்கள் உண்மையானதா? எனக் கேட்டதால் துறவி கோபமடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கி 5 நாட்களாக மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில் கல்பவாசம் செய்ய பல்வேறு துறவிகள் வருகை தருவது வழக்கம். இதுபோன்ற வித்தியாசமான துறவிகளில், கூலிங்கிளாஸ் பாபா, யோகா பாபா, கம்ப்யூட்டர் பாபா, சைக்கிள் பாபா எனப் பலர் உண்டு. இவர்கள் மொத்தமுள்ள 13 அகடாக்களில் ஏதாவது ஒன்றின் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
இந்த பாபாக்கள், தாம் கற்ற திறன்களை கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் முன் காட்டுவதும் உண்டு. இவைகளை பதிவு செய்து, அவர்களைப் பேட்டி எடுக்கவும் பல நூறு செய்திச் சேனல்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளன.
இந்நிலையில், ‘காட்டே பாபா (முள்கள் துறவி)’ என்பவர் கும்பமேளாவின் திரிவேணி சங்கமக் கரையில் கடுமையான முட்களை பரப்பி அதன் மீது படுத்திருந்தார். இவரை அணுகிய உத்தரப் பிரதேசத்தின் செய்தி தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தார். அப்போது அவர் எழுப்பிய ஒரு கேள்வி முள் பாபாவின் கோபத்தை தூண்டிவிட்டுள்ளது.
நிருபர், “பாபா நீங்கள் படுத்திருக்கும் முட்கள் உண்மையானவையா?” எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளிக்க தம் முள்படுக்கையிலிருந்து எழுந்தார் பாபா.
பின்பு நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இத்துடன் அவரை பிடித்து, “வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி” என பதிலளித்தார்.
இதை கண்டு சுற்றியிருந்த பக்தர்கள் கூட்டம் கைகொட்டிச் சிரித்ததுடன் அந்த நிருபருக்கு ‘முள் பாபா’ ஆசி வழங்கி விட்டதாக நகைப்புடன் தெரிவித்தனர். இவை அனைத்தையும் காட்சிப் பதிவாக்கிய செய்தித் தொலைக்காட்சி அதை அப்படியே ஒளிபரப்பியது.