மதுரை: மதுரை மத்தியில் சிறையில் போதைப்பொருட்களைக் கண்டறியும் பணியில் இருந்த மோப்ப நாய் உயிரிழந்தது. 21 குண்டுகள் முழங்க உடலடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைக் கண்டறியும் விதமாக மோப்ப நாய் ஒன்று பணியில் இருக்கிறது. இந்த மோப்ப நாய்கள் தினமும் காலை, மாலை நேரத்தில் சிறை வளாகத்தில் சந்தேகிக்கும் அறைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சோதனையில் ஈடுபடுத்துவது வழக்கம்.
இதன்படி, மதுரை மத்திய சிறையிலும் கடந்த 2015- பிப். 22ம் தேதி முதல் ‘அஸ்ட்ரோ’ என்ற மோப்ப நாய் ஒன்று பணியில் இருந்தது. வயது முதிர்வு காரணமாக இன்று காலை அந்த மோப்ப நாய் உயிரிழந்தது. அஸ்ட்ரோ-வின் உடலுக்கு சிறைத்துறை டிஐஜி முருகேசன், எஸ்பி சதீஷ்குமார், ஜெயிலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறை வளாகத்தில் உடலடக்கத்திற்கு ஏற்பாடு செய்தனர். 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நாய் டிஎஸ்பி பதவிக்கு இணையான மதிப்பில் கருதப்பட்டது என, சிறைத்துறையினர் தெரிவித்தனர். ‘அஸ்ட்ரோ’ மோப்ப நாய் உயிரிழந்த சம்பவம் மதுரை சிறைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது.