புதுடெல்லி: நாட்டுக்கு நலம் தரும் இலவசங்களை பிரதமர் நரேந்திர மோடி இப்போதாவது ஏற்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்ட தேர்தல் அறிககையில், பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனது கேள்வி என்னவென்றால், இதற்காக அவர் பிரதமர் மோடியின் ஒப்புதலைப் பெற்றாரா? ஏனென்றால், இலவசங்களை வழங்கியதற்காக பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட முறை என்னை விமர்சித்துள்ளார். இப்போது பாஜகவின் தேசியத் தலைவர், என்னைப் போலவே இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என தான் கூறியது தவறு என பிரதமர் மோடி இப்போது கூற வேண்டும். இலவசங்கள் நாட்டு மக்களுக்கு நன்மையைத் தரும் என்பதை பிரதமர் மோடி இப்போதாவது ஏற்க வேண்டும்” என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும். எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பின்தங்கிய பகுதிகளில் ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும். 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.