பெய்ரூட்:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் லெபனானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பெய்ரூட் வந்து சேர்ந்த அவரை விமான நிலையத்தில் லெபனான் இடைக்கால பிரதமர் நிஜாப் மிகாட்டி வரவேற்றார். பெய்ரூட்டில் இருந்து புறப்படும் மேக்ரான், நாட்டின் தெற்கு பகுதிக்கு பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லெபனான் நாடு பல ஆண்டுகளாக சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பிராந்திய மோதல்கள், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் லெபனானில் பிரான்ஸ் அதிபரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட முயற்சிகளை மேக்ரான் மேற்கொள்ள உள்ளார்.
லெபனானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்களை மேக்ரான் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரான்ஸ் அதிபரின் வருகை குறித்து லெபனான் இடைக்கால பிரதமர் மிகாட்டி கூறுகையில், “பிரான்ஸ் அதிபர் மேக்ரான் புதிய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளை மேக்ரான் சந்திக்க உள்ளார். பின்னர் லெபனான் அதிகாரிகளை சந்திப்பார்” என்றார்.
60 நாள் போர் நிறுத்தம் முடிவடையும்போது, இஸ்ரேல் தனது படைகளை லெபனானில் இருந்து திரும்ப பெறும் என்று பிரான்ஸ் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மிகாட்டி, இஸ்ரேல் படைகள் வெளியேறுவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், பிரான்ஸ் தரப்பு இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார்.