காஞ்சிபுரம்: தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் இன்று (ஜன. 17) பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அந்தப் பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வருகை தருவதையொட்டி, அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்கிய விஜய் தனது முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து பொதுமக்கள், மற்றும் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக போலீஸார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்பாடுகள் தீவிரம்: இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று போராடும் மக்களை அக் கட்சியின் மாநில நிர்வாகிகள் அய்யநாதன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். விஜய் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அவர்களுடன் விவாதித்தனர். இந்நிலையில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் போராட்டக் குழுவினரை இன்று சந்தித்துப் பேசினார். விமான நிலையம் அமைய உள்ள இடங்களை பார்வையிட்டார். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே பொதுமக்களை விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடங்களில் ஆய்வு செய்தார்.
அனுமதி மறுத்தால் அடுத்த கட்டம் என்ன? – பிரச்சினைக்குரிய வகையில் பரந்தூருக்குள் வெளிநபர்கள் நுழைந்தால் போலீஸார் ஏற்கெனவே தடுத்து வருகின்றனர். இதனால் விஜய் பரந்தூருக்குள் வருவதற்கு அனுமதி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறுவதா? அருகில் உள்ள தனியார் இடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை வரவழைத்து சந்திப்பதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.