கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. இவரை சில நாள்களாக காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த கோபன் சுவாமி கடந்த 9-ம் தேதி சமாதியானதாக அவரது மனைவி சுலோச்சனா மற்றும் மகன்கள் தெரிவித்துவந்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் போலீஸார் கல்லறையை திறக்க முயன்றபோது குடும்பத்தினர் தடுத்து போராட்டம் நடத்தினர்.
கோபன் சுவாமியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக சில இந்து அமைப்புகளும் களம் இறங்கியதால் இந்த விவகாரம் விவாதம் ஆனது. மேலும், கோபன் சுவாமியின் கல்லறையை திறக்கக்கூடாது என அவரது மனைவி சுலோச்ச்சனா ஐகோர்ட்டில் ரிட்மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், இறப்பு சான்றிதழ் எங்கே என கேள்வி எழுப்பியதுடன், போலீஸ் நடவடிக்கைக்கு தடை விதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து சப் கலெக்டர் ஆல்பிரட் முன்னிலையில், கோபன்சுவாமியின் கல்லறை இன்று காலை திறக்கப்பட்டது.
கல்லறைக்குள் அமர்ந்த நிலையில் கோபன் சுவாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கழுத்துவரை கற்பூரம், விபூதி மற்றும் வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டிருந்தன. அவரது முகம் அடையாளம் தெரியும் அளவில் இருந்துள்ளது. கோபன் சுவாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது. விபூதி போன்றவை அவரது மூச்சுக்குழாயில் சென்றுள்ளதா என பரிசோதிக்க அவரது சுவாச மண்டலம் தனியாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் என்னவென்றும் கண்டறிவதற்காக கோபன் சுவாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்கள் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.