வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான சந்தா நகரில் பிறந்த சாய் வர்ஷித் கந்துலா, கிரீன் கார்டுடன் அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இருந்தார். நீதிமன்ற ஆவணங்களின்படி, சாய் வர்ஷித் கந்துலா மே 22, 2023 அன்று மதியம் மிசோரியின் செயிண்ட் லூயிஸிலிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு விமானத்தில் சென்றுள்ளார். அன்று மாலை 5:20 மணியளவில் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர், மாலை 6:30 மணிக்கு ஒரு லாரியை வாடகைக்கு எடுத்துள்ளார்.
லாரியை வெள்ளை மாளிகை நோக்கி ஓட்டிய சாய் வர்ஷித் கந்துலா, இரவு 9:35 மணிக்கு வெள்ளை மாளிகை மற்றும் அதிபர் பூங்காவைப் பாதுகாக்கும் தடுப்புகள் மீது மோதி உள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர். லாரியை பின்னோக்கி நகர்த்திய சாய் வர்ஷித் கந்துலா, மீண்டும் தடுப்புகள் மீது வேகமாக மோதி உள்ளார். இதையடுத்து, லாரி செயலிழந்துள்ளது. அதன் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளிவரத் தொடங்கி உள்ளது. மேலும், திரவங்கள் கசியத் தொடங்கி உள்ளன. இதனையடுத்து, லாரியை விட்டு கீழே இறங்கிய கந்துலா, ஒரு பையிலிருந்து, நாஜி கொடியை வெளியே எடுத்து அதை அசைத்துக் காட்டி உள்ளார்.
அமெரிக்க பூங்கா காவல்துறை மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள், சம்பவ இடத்தில் கந்துலாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வெள்ளை மாளிகைக்குள் சாய் வர்ஷித் கந்துலா நுழைய முயன்றார். ஜெர்மனியின் நாஜி சித்தாந்தத்தால் தூண்டப்பட்ட அவர், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தனது தலைமையில் ஒரு சர்வாதிகார அரசை அமைக்க திட்டமிட்டுள்ளார். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். தனது நோக்கத்தை அடைய தேவைப்பட்டால் அமெரிக்க அதிபர் உள்ளிட்டோரை கொலை செய்ய ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கந்துலா விசாரணை அதிகாரிகளிடம் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி டாப்னி எல் பிரீட்ரிக், கந்துலாவுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் 8 ஆண்டுகள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். லாரியைக் கொண்டு மோதியதால், தேசிய பூங்காவுக்கு USD 4,322 அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன் பல வாரங்கள் இது தொடர்பாக அவர் திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.