தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை இன்று அ.தி.மு.க தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர் குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.