'StartUp' சாகசம் 7 : `கசப்பை எப்படி விக்கிறாங்கனு தேடினேன்’ – அர்ச்சனா பகிரும் `Thy Chocolates’ கதை

உலக அளவில் கொக்கோ (கோகோ), சாக்லெட் செய்ய, சுவை மிகுந்த பானங்கள் மற்றும் மருத்துவ பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொக்கோ (கோகோ) வின் தேவை ஒவ்வொரு வருடமும் 15 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. உலகளவில் கொகோ(கோகோ) உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீத அளவிலேயே உள்ளது. ஆனால் அதிலிருந்து வரும் சாக்லேட் நுகர்வு இந்தியாவில் மிக அதிகம். கொக்கோ (கோகோ) தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையை தாயகமாக கொண்டது என்றாலும், இப்போது உலக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது ஏறக்குறைய 2,500 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுதோறும் சுமார் 200 டன் அளவில் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக சாக்லேட் இனிக்கும் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில் சாக்லேட் செய்யப்பயன்படும் கொக்கோ கசப்புத்தன்மை கொண்டது. அந்த கசப்புத்தன்மை கொண்ட டார்க் சாக்லேட்தான் மருத்துவ நன்மைகள் கொண்டது என்கிறார்கள். அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கிறது, மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது , செரோடோனின் அளவை அதிகரிக்கிறது.

மேலே உள்ள நன்மைகள் வேண்டுமா அதற்கு கடைகளில் உள்ள சாக்லேட்களில் 75% அல்லது அதற்கு மேல் கொக்கோ அடங்கிய டார்க் சாக்லேட்டை தேர்வு செய்யவேண்டும். தினமும் 30-50 கிராம் அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அனைத்து சாக்லேட்களும் ஆரோக்கியமானவை அல்ல, கடைகளில் விற்கும் இனிக்கும் சாக்லெட்டுகள் அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், பல் சொத்தையை உருவாக்கும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

எனவே நண்பர்களே சாக்லேட் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை கொக்கோ சதவீதம், அதில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு ஆகியவற்றைதான் கவனித்து வாங்க வேண்டும். டார்க் சாக்லேட் எனும் கறுப்பு சாக்லேட் தமிழ்நாட்டில் தேவை மற்றும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இருப்பினும், தரமான டார்க் சாக்லேட் தயாரிப்புகளின் விலை அதிகமாக இருப்பதால், இது இன்னும் ஒரு பிரீமியம் தயாரிப்பாகவே கருதப்படுகிறது.

இந்த சவாலான சாக்லேட் துறையில் சாதிக்க வந்திருக்கும் புதிய நம்பிக்கை. அர்ச்சனா விஜயராமன். டார்க் சாக்லேட்டுக்கென ( கறுப்பு சாக்லெட்) தனிச்சந்தையை உருவாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

இனி அவரின் வார்த்தைகளில்…

அர்ச்சனா விஜயராமன்

“என்ன படிச்சிருங்க, எப்படி சாக்லேட் மேல் ஆர்வம் பிறந்தது? இத்தனைக்கும் பெரிய நிறுவனங்கள் கையில் சாக்லேட் துறை இருக்கும்போது எந்த நம்பிக்கையில் ஆரம்பிச்சிங்க…. எது உங்களை சாக்லேட் நோக்கி உந்தித்தள்ளியது?”

“நான் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்ட் பொறியாளர், பெரிய ஐடி நிறுவனங்களில் 4 வருடம் ஆரக்கிள் இஆர்பியில் வேலைபார்த்தேன். பெரிய அளவில் என் வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் அதிலிருந்து வெளிவந்து வெப்சைட், கிராபிக்ஸ் டிசைனிங் நிறுவனம் ஆரம்பிச்சேன். அதில் 10 வருடம் நிறைய நிறுவனங்களுக்கு பணியாற்றினோம்.

கொரொனா நேரத்தில் எனக்கு கல்யாணம் நடைபெற்றது. கொரோனோ நேரத்தில் அவ்வப்போது என் கணவர் எனக்கு டார்க் சாக்லேட் வாங்கிக்கொடுத்தார். முதல் முறை என் அப்பா ஸ்விட்சர்லாந்து போனபோது நிறைய சாக்லேட்கள் எனக்கு வாங்கிவந்தார். அதை சாப்பிட்ட நாங்கள் கசப்பாக இருந்ததால், அதனை கண்டுகொள்ளவேயில்லை. கசப்பை எப்படி விக்கறாங்க என்று தேட ஆரம்பித்தபோதுதான் நான் சாப்பிடுவது சர்க்கரை, ஆரோக்கியமானது அல்ல என்று புரிந்தது. அவ்வளவு கசப்புக்கு காரணம், அதில் உள்ள மூலப்பொருள் கொக்கோ, கொக்கோ என்றால் என்ன? அதில் எவ்வளவு இனிப்பு கலக்கணும் என்பதெல்லாம் தெரிந்துகொண்டேன். அதோடு செய்தும் பார்த்தேன். வீட்டில் நிறைய செய்தும் பார்த்தேன். லாக்டவுனில் கொஞ்சம் கொஞ்சமா விநியோகம் செய்ய ஆரம்பித்தது. அது அப்படி தொடர்ந்தது.

டார்க் சாக்லேட் ஆரோக்கியமானதாக இருப்பதால் ஏன் கடைகளில் விற்கக்கூடாது என முயற்சி எடுத்தேன். சென்னையிலிருக்கும் ஆர்கானிக் கடைகளில் சாக்லேட் விற்க மாட்டார்கள். அதனால் அவர்களை இலக்காக வைத்து சென்னை அடையாற்றில் உள்ள கடையில் கேட்டுப்பார்த்தேன். அவர்கள் வெள்ளை சர்க்கரை இல்லாமல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தைப் பயன்படுத்தி சாக்லேட் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். அதை சவாலாக எடுத்து நஞ்சில்லா விவசாயம் மூலம் விளைந்த கொக்கோவை எடுத்து சாக்லேட்டாக உருவாக்கி அதை கொடுத்தேன். அதற்கு வரவேற்பு இருந்துச்சு….

இதற்கு 6 மாதம் ஆனாலும், வெற்றி பெற முடிந்தது. அந்தத் துவக்கம்தான் இன்று தை சாக்லேட்ஸ் (Thy Chocolates) ஆக நிற்கிறது.”

“தமிழ்நாட்டின் பல இடங்கள் பெரும் வெப்ப நிலையில் இருக்கும்போது உங்க்ள் சாக்லேட் எப்படி உருகாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் நிறைய செலவாகுமே…”

“சாக்லேட் கையில் தொட்டால் உருகும் அதன் தன்மை அப்படித்தான். அதிலும் நாங்கள் எந்த கலப்படமும் இல்லாமல் கொடுக்கும்போது விரைவாக உருகும்தான். 30 டிகிரி செல்சியஸ் மேல் போகும்போது உருகும். இதை முதலிலேயே நாங்கள் வாடிக்கையாளருக்கு சொல்லிவிடுகிறோம். சாக்லேட் உருவாக்கும்போதே குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே சாக்லேட் உருவாக்க முடியும். அதன்பின் விநியோகம்… 24 மணி நேரத்தில் டெலிவரி செய்துவிட்டால் சிக்கல் இல்லை.

அதன்பின் வாங்குபவர்கள் தங்கள் வீட்டில் சாக்லேட்டை எப்படி வைத்து பயன்படுத்தவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறோம். அப்படித்தான் இன்றுவரை வாடிக்கையாளர்களுக்கு சொல்லியே விற்பனை செய்கிறோம்”

“உங்கள் லிங்கிடுஇன் புரோபைலை பார்த்தபோது டெல்லி, பெங்களுர், உள்பட பல இடங்களில் ஸ்டால் போட்டிருக்கிங்க. இன்றைய நிலையில் பல பெண் தொழில்முனைவோர் தங்கள் வீடுகளில் தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனும்போது நீங்கள் பல இடங்களில் தனியாகவே ஸ்டால் போட்டிருக்கிங்க. அதற்கு உங்கள் வீட்டில் குறிப்பாக கணவர் வீட்டில் எப்படி சப்போர்ட் பண்ணறாங்க?”

“வேற வேற பிசினஸ்ல இருந்திருக்கேன். ஆனால் உற்பத்தி செய்து விற்பனை செய்தது இல்லை. இது முழுக்கவே புதிய அனுபவம். அதற்கு நான் நிறைய இடங்களுக்குப் பயணப்பட்டாக வேண்டும். நான் புகுந்த வீட்டில் தொழில் செய்ய விடுவார்களா என்றெல்லாம் தோன்றியது. ஆனால் என் கணவர் மிகுந்த ஊக்கம்கொடுத்து என்னை எனது தொழிலை கவனிக்கச்சொன்னார். அதிவுமில்லாமல் நான் ஏற்கனவே பல ஊர்களுக்கு தனியாக பயணித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு கணவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு இந்த தொழிலில் நான் மேம்பட காரணமாயிருந்தது என்றும் சொல்லலாம்.”

“சாக்லேட் துறையில் நிறைய சாக்லேட் வகைகள் இருக்கே. எப்படி சமாளிக்கப்போறிங்க, அதுக்கான திட்டம் என்ன?”

“கமர்சியல் சாக்லெட் என்பது ஒரு வகை. ஊட்டி சாக்லேட் ஒரு வகை. சாக்லேட்டில் எவ்வளவுனு கொக்கோ (கோகோ) விகிதம் இருக்கிறதோ அதைப்பொறுத்துதான் அது சாக்லேட்டா என்பதே தீர்மானம் செய்கிறோம். couverture chocolate தரமானது , அதைவிடை கம்மியாக கொடுக்க, சர்க்கரை, பட்டருக்கு பதிலாக தாவர எண்ணெய்… இதெல்லாம் விலையை தீர்மானிக்குது. கொக்கோவ எவ்வளவு அதிகமாகத் தருகிறோமா அதுதான் ஆரோக்கியம். அதை நாங்கள் கொடுக்கிறோம்.

அதற்கு என தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. அவர்களைத்தான் நான் தேடித்தேடி விற்பனை செய்துவருகிறேன். சவால் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதைத்தாண்டி நாங்கள் முயல்வதால் சந்தையில் எங்களுக்கு ஒரு இடத்தை பெற்றுள்ளோம்.

சாக்லெட் செய்வதை ஒரு கலை என்கிறோம். பெரிய செட் அப்பில் கமர்சியலா செய்வது ஒரு கலை, எங்களிடம் இருப்பதைக்கொண்டு ஊட்டச்சத்து இழக்காமல் கொண்டுவருவது ஒரு கலை. அதை நாங்கள் செய்கிறோம்”

“தமிழ்நாட்டில் உள்ள உணவுப்பொருட்களை ஒன்றிணைத்து சாக்லெட் செய்ய வாய்ப்பிருக்கா?”

“நாங்கள் முதலில் வெல்லத்தைக் கொண்டுதானே சாக்லேட் செய்தோம். தேங்காய் சர்க்கரையை ஒரு மாற்றாகக்கொண்டு முயற்சித்தோம். இவை இரண்டுமே எங்களுக்கு நம்ம ஊர் இனிப்பு என்ற அடையாளம் கொண்டது. நிறைய உள்ளுர் உணவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறோம். விரைவில் அதையும் எதிர்பார்க்கலாம். அதுவுமில்லாம சாக்லேட் மட்டுமே செய்துகொண்டிருக்கும் நாங்கள் குழந்தைகளுக்கு தனியாக சாக்லேட் பானமாக கொடுத்தோம் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் எங்கள் இலக்கு குறைந்த பட்சம் ஒரு 1% சந்தை மதிப்பை பெறுவது அதை நோக்கி இலக்கு வைத்து நாங்கள் பயணிக்கிறோம். அதற்கு இந்த உள்ளுர் இனிப்புப்பொருட்கள் எங்களுக்கு உதவும்.

அதோடு நஞ்சில்லா முறையில் கொக்கோ விளைவிக்கும் விவசாயிகளைத் தேடி தேடி வாங்கி வருகின்றோம். இதன் முலம் உள்ளளுர் விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தேங்காய் சர்க்கரை இன்னமும் தமிழ்நாட்டில் பரவலா இல்லை. அதை வைத்து இனிப்பு கொடுக்கும்போது அதுவும் பரவலாகும் வாய்ப்பு இருக்கிறது. எங்கள் தை சாக்லேட் (Thy chocolate) தமிழ்நாட்டில் ஒரு ஒருங்கிணைந்த சூழ்நிலையை உருவாக்கி அனைவருக்கும் வெற்றி என்பதை நோக்கியே பயணிக்கிறோம்.”

“நீங்கள் ஏதேனும் அரசின் நிதி உதவியை பெற்றுள்ளீர்களா?”

“தமிழ்நாடு அரசின் ஸ்டார்அப் தமிழ்நாடு வழியே TANSEED 6.0 நிதியை பெற்றுள்ளோம். இதைக்கொண்டு கோகோ விவசாயிகளுடன் ஒருங்கிணைத்து தரமான இந்திய கொக்கோவை உற்பத்தி செய்து, அதிலிருந்து தரமான சாக்லேட்டை உலக அளவில் பரவலாக கொண்டுபோவதுதான் எங்கள் நோக்கம்.

டிஎன் ரைஸ் தொழில் காப்பகத்தில் தேர்வாகியிருக்கிறோம். அதிலிருந்து சந்தைப்படுத்துதல் , புதிய சாக்லேட்கள் அறிமுகம் ஆகியவற்றிற்கு அவர்கள் எங்கள் வழிநடத்துவார்கள்.

எங்களுக்கு வீ மகளிர் அமைப்பு (Women Empowerment & Enterprenureship ) நிறைய உதவியது.”

டார்க் சாக்லெட் துறையில் விவசாயிகளுக்கும், மக்களுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்க முயலும் அர்ச்சனாவின் கனவு மெய்பட வாழ்த்துவோம்.

(சாகசம் தொடரும்..!)

Startup

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) தமிழ்நாடு விதை நிதி, ஒரு புதிய தொழில்முனைவோர் தனது புதுமையான யோசனையை நனவாக்க, அதற்குத் தேவையான மூலதனம், வழிகாட்டுதல், ஆதரவு போன்றவற்றை அளிக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்தாக்கம் தான் “StartupTN Seed Fund”.

StartupTN Seed Fund வழியாக முதலீடு மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை.

யோசனையை நனவாக்குதல்: தங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைப் பெறுதல்.

தொழில் வளர்ச்சி: திட்டப் பணி தயாரிப்பு, பொருள்/சேவை தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.

வல்லுநர் வழிகாட்டுதல்: Startup TN Seed Fund பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வணிகத் திட்டமிடல், சந்தை ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகளில் வல்லுநர் வழிகாட்டுதலை வழங்குகின்றன.

நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: விதை நிதி வழியாக, தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மற்றும் பிற தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.