திருநெல்வேலி: திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிக்கு வந்தவர்களின் வாகனங்களால் கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழச்சிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக தென்மாவட்ட இசை ரசிகர்களுக்காக திருநெல்வேலியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று இரவில் நடத்தப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான நான்கு வழிச்சாலையையொட்டி ரெட்டியார்பட்டி பகுதியில் திறந்தவெளி திடலில் இந்நிகழ்ச்சி நடத்த மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் என்ற அளவுக்கு பல்வேறு வகையான டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.பொங்கல் விடுமுறையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக காவல் துறை கணக்கிட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் வந்துள்ளன. இதனால் நிகழ்ச்சி தொடங்குமுன் நேற்று மாலை 6 மணியிலிருந்தே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கார்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற பிறவாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கி திணறின. இதுபோல் இன்னிசை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் வாகன நெரிசல் காணப்பட்டது.