வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாளை மறுநாள் அவர் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் சில மாற்றங்களை டிரம்ப் அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், நம்முடைய மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அது பதவியேற்கும் முன்பு கூட என தெரிவித்துள்ள அவர், வாஷிங்டன் டி.சி.க்கான வானிலை முன்னறிவிப்பு, கடுமையான குளிராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், வெப்பநிலை கடுமையாக குறைய கூடும். எந்த வகையிலும் மக்கள் புண்படவோ, துன்புறுத்தலுக்கு ஆளாகவோ நான் விரும்பவில்லை. போலீசார், முன்கள பணியாளர்கள் மற்றும் குதிரைகளுக்கு கூட அபாய சூழ்நிலையாக இருக்கும்.
ஜனவரி 20-ந்தேதி கேபிட்டால் கட்டிடத்திற்கு வெளியே பல மணிநேரம் நிற்பது என்பது லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் (எந்த நிகழ்ச்சியானாலும், நீங்கள் வரவேண்டும் என முடிவு செய்து விட்டால், கதகதப்பான ஆடைகளை அணிந்து வரவும்) என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
இதனால், டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவின் கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெறும் என தெரிகிறது. இது மிக பெரிய, வட்ட வடிவிலான அறையாகும். கடுமையான வானிலையால், கடந்த 1985-ம் ஆண்டு ரொனால்டு ரீகனும் இதற்கு முன்பு இதேபோன்று மூடிய அறையில் பதவியேற்று கொண்டார்.
எனினும், பதவியேற்பு விழாவானது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கும் என தன்னுடைய ஆதரவாளர்களுக்கு, மீண்டும் உறுதியளித்துள்ள டிரம்ப், ஜனாதிபதி பேரணி மற்றும் பிற நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.