சாலை, பாலங்களை சரியாக அமைக்காத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய சட்டம்: பாஜக வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சாலைகள், மேம்பாலங்களை சரியாக அமைக்காவிட்டால், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது ‘பிணையில்லாத குற்றமாக’ மாற்றப்பட வேண்டும். சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

இது மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் கண்டிப்பாக செயல்படுத்தபட வேண்டும். நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், அரசின் பல்வேறு கட்டடங்கள் பல நூறு கோடிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன. ஆனால், முறையாக அமைக்கப்படாததால், விரைவிலேயே அவை சேதமடைவதும், உடைவது, மழைநீரில் அடித்துச் செல்வதும் நிகழ்கின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த கோரிக்கையை அதிமுக உறுப்பினர் எழுப்பியபோது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேலி செய்து கடந்திருக்கிறார். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் அணையே அடித்துச் செல்லப்பட்ட அவலம் நடந்தேறியது. தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சார்பாக தமிழகமெங்கும் மாநகராட்சிகளில், உள்ளாட்சிகளில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது தரமற்ற சாலைகளை தாண்டி சாலைகளின் ஓரம் மக்கள் நடக்கும் நடைபாதைகள் அதேபோன்று தரமற்று மோசமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், தவறுகள் நடப்பதை கண்டித்து உரிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை. தமிழகம் முழுக்க உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தரமற்ற சாலைகள், நடைபாதைகள், தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்துமே ஊழல் மயமாகி உள்ளது.

எனவே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபடி, சாலைகள், மேம்பாலங்கள், அரசு கட்டடங்கள் சரியாக அமைக்கப்படாவிட்டால், ஒப்பந்ததாரர், பொறியாளர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் பிணையில் வெளியே வர முடியாதபடி கைது செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.