சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் 900-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 165 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இணைந்து ஆண்டுதோறும் தை 4-ம் நாள் பொங்கல் விழாவும், தை 5-ம் நாள் மஞ்சுவிரட்டும் நடத்துகின்றனர். அதன்படி நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. தொடர்ந்து மெழுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். மாலையில் சப்பரப்பவனி நடைபெற்றது.
இன்று (ஜன.18) நடைபெற்ற மஞ்சுவிரட்டைக் காண வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு கிராம மக்கள் போட்டி, போட்டு விருந்தளித்தனர். இதற்காக அவர்கள் வீதிகளில் நின்று கொண்டு, அவ்வழியாகச் சென்றோரை கைகூப்பி வணங்கி விருந்துக்கு அழைத்தனர். அவர்களுக்கு 5 வகை பொரியலோடு உணவளித்து உபசரித்தனர். தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கோயில் காளையை மஞ்சுவிரட்டு தொழுவுக்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் கிராமமக்கள் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து தொழுவில் இருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிவகங்கை ஆட்சியர் ஆஷாஅஜித் மஞ்சுவிரட்டு உறுதிமொழி வாசித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயில் காளை அவிழ்த்துவிட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 137 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 45 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக கண்மாய் பொட்டல், வயல்வெளிப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகள் முட்டியதில் குன்றக்குடி அருகே கொரட்டியைச் சேர்ந்த பார்வையாளர் சண்முகம் (70) என்பவர் உயிரிழந்தார். மேலும் மாடுகள் முட்டியதில் 165 பேர் காயமடைந்தனர்.மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு 42 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்களுக்கு அங்குள்ள முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டை சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் சரக்கு வாகனங்களில் ஏறி நின்று ரசித்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.