பாங்கி,
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாவது உலகக்கோப்பையில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த நிலையில் 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் இன்று தொடங்கியது. கோலாலம்பூர், பாங்கி, ஜோஹார், குச்சிங் ஆகிய 4 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, இலங்கை, வெஸ்ட் இண்டீசும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவும், ‘சி’ பிரிவில் நியூசிலாந்து, நைஜீரியா, சமோவா, தென் ஆப்பிரிக்காவும், ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், ஸ்காட்லாந்தும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்-6 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 48 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக எம்மா வால்சிங்கம் 12 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் எலினோர் லரோசா, கவோம்ஹே பிரே ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 49 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 6.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 49 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கேட் பெல்லே 29 ரன்கள் எடுத்தார்.