டெல்லியில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் புதிய தலைமையகம் கட்டியுள்ளது. இதனால் அரசு கட்டிடங்களில் உள்ள அக்கட்சிகளின் அலுவலகங்கள் காலி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012-ல் டெல்லியின் நிலம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புதிய அலுவலகம் கட்ட நிலம் பெற்றன. அப்போது அடுத்த 3 வருடங்களில் அரசு கட்டிடங்களில் செயல்படும் கட்சி அலுவலகங்களை காலி செய்து தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
மூன்று வருடங்களுக்கு பிறகு புதிய கட்டிடம் கட்ட கட்சியில் போதிய நிதியில்லை என காங்கிரஸ் காரணம் கூறியது. இதே காரணத்தை பாஜகவும் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பாஜகவின் புதிய தலைமையகம் பண்டிட் தீன்தயாள் உபாத்யா மார்க் பகுதியில் கடந்த 2018 பிப்ரவரியில் திறக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் 9-ஏ கோட்லா சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கட்டிடங்களில் உள்ள தங்கள் அலுவலகங்களை இக்கட்சிகள் காலி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி அக்பர் சாலையில் காங்கிரஸ் தலைமையகம் 1978 முதல் இயங்கி வந்தது. நாடாளுமன்றத்திற்கு அருகில் ரெய்சானா சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் செயல்படுகிறது.
பாஜகவுக்கு அசோகா சாலையிலும் பண்டிட் பந்த மார்கிலும் இரண்டு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பாஜக புதிய தலைமையகம் கட்டிய பிறகு பழைய அலுவலகங்களை இதுவரை காலி செய்யவில்லை. இதுபோல் காங்கிரஸும் பழைய அலுவலகங்களை காலி செய்வதை ஒத்திப்போடும் எனத் தெரிகிறது.
டெல்லியில் பிற கட்சிகள் 6 அரசு கட்டிடங்களை தங்கள் அலுவலகங்களாக பயன்படுத்துகின்றன. திமுக தனக்கு கிடைத்த நிலத்தில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டி, திறப்பு விழாவும் நடத்தி விட்டது. இதேபோல் சாக்கேத் பகுதியில் அதிமுகவும் ஒரு கட்டிடம் கட்டிவிட்டது. அதிமுகவில் நிலவும் மோதல் முடிவுக்கு வந்த பிறகு அக்கட்டிடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.