சோழிங்கநல்லூர்: 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
“நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த எம்ஜிஆர் மற்றவர்கள் தங்களுடைய வீட்டுக்காக வாழ்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய பெருமை. எம்ஜிஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சி நடத்த முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் எம்ஜிஆர். 1962-ம் ஆண்டு எம்எல்சியாக வந்தார்; அவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார்.
தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில் வாரிசு உள்ளது. ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.
அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் பலர் முயற்சிக்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வ பிறவிகள் உருவாக்கிய கட்சி. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும் அது நிலைக்காது; சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது, யாரும் அதை பற்றி கவலை பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை முறியடிக்க வேண்டும்.
நம்முடைய தலைவர்கள் பல சோதனைகளை கடந்து கட்சியை நடத்தினார்கள். நாமும் அது மாதிரியான சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.
அதிமுக ஆட்சியில் கடுமையான கரோனா காலம் மக்களின் உயிரைக் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். 36 ஆயிரம் கோடி மக்களுக்காக செலவழித்தோம். 11 மாதம் ரேஷன் கடைகளில் அனைத்தும் இலவசமாக கொடுத்தோம். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்.
7.5 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றினோம். ஏழை மக்கள் இருக்கும் பகுதியினை தேர்வு செய்து அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. 2000 அம்மா மினி கிளினிக்கினை இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மூடிவிட்டனர். அதிமுக அரசில் கொண்டு வந்த அனைத்தையும் நிறுத்துவது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. 11 அரசு மருத்துவ கல்லூரி நாங்கள் கொண்டு வந்தோம். இன்ஜினியரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி புதிய பள்ளிகள் தொடங்கினோம்.
இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்வது தான் திமுக. மக்களுக்கு ஆட்சி செய்வது அண்ணா திமுக. மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
தற்போது திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விரைவாக திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது திமுக. திமுக அரசு செய்யும் தவறுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சரியாக சொன்னாலோ திமுக அரசு காணாமல் போய்விடும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் 522 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக அரசு. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.
அதிமுகவின் நிர்பந்தம் காரணமாக பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஓட்டை உடைசல் தேறாத பேருந்துகளை முன் பின் பெயிண்ட் அடித்து விட்டு இலவசமாக பயணம் செய்ய வைக்கிறார். அதிமுக அட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் சுமார் 2000 பேருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் திமுகவுக்கு சாவு மணி தான். சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம் பாலம், வேளச்சேரி மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம் இப்படி பல பாலங்களை இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.
அதிக கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பல புயல்கள் வந்தது, சிறப்பாக சமாளித்தோம். பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்தோம். ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும்.
மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது.
திமுக அரசியல் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிமுக அரசியல் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது கூட்டுறவுத் துறை மூலம் பொருட்களை வாங்கி விலைவாசியை கட்டுப்படுத்தினோம். கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை ஆளாக்கப்பட்டதால் அந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் எஃப்ஐஆர் கசிந்துவிட்டது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ‘யார் அந்த சார்?’ என்று நாங்கள் கேட்டோம். பல மந்திரிகள் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதிமுக ஆட்சி மலரும். அந்த பெரும்புள்ளி யார் என்று வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அவை மாண்பை தொடர்ந்து சீரழித்தது திமுக தான். நாங்கள் ஒன்றும் சட்டமன்றத்தின் அவை மாண்பை சீரழிக்கவில்லை. நீட் ரத்து செய்ய ரகசியம் இருக்குது என்றார். என்ன ஆனது என கேட்டோம். மத்திய அரசாங்கத்தின் கையில் உள்ளது என்று சொல்கின்றனர். நாங்களும் அதுதான் சொன்னோம்.
ஸ்டாலின் அரசு திவால் ஆகப் போகிறது. திமுக அரசு 356 கோடி கடன் உள்ளது. இந்த பணம் எங்கே போனது? புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லையே? இதனை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் பதில் இல்லை. நாங்கள் ஆறு மாவட்டத்தை உருவாக்கினோம். நீங்கள் ஒரு மாவட்டத்தை கூட உருவாக்கவில்லை. பல கல்லூரிகள் கொண்டு வந்தோம். நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை கூட கொண்டு வரவில்லை. கரோனாவால் வருமானம் இல்லாமல் ஆட்சியை செய்தோம் நல்ல வருவாய் இருந்தும் தமிழகத்திற்கு அதிக கடன் உள்ளது.
இந்த கடனால் நம் மீது வரி சுமை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைப்போம் என சொன்னீர்கள். ஆனால் வரியை உயர்த்தி விட்டீர்கள். மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் வரி உயர்ந்துள்ளது. மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சி தான் ஸ்டாலின் அரசு. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார்,” என்று அவர் பேசினார்.