பிணைக் கைதிகள் விடுதலைக்கு தயாராகும் இஸ்ரேல்… வீடு திரும்பும் நம்பிக்கையில் காசாவாசிகள்!

டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, ஹமாஸ்களால் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளை வரவேற்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள காசா மக்களும் தங்களது வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையில் உள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது.

ஓர் ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே எட்டப்பட்டது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்துகான கவுன்டவுன் தொடங்கியுள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளூர் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு அதிகாரபூர்வமாக அமலுக்கு வர இருக்கிறது.

மூன்று கட்டமாக… – நடைமுறைக்கு வர இருக்கும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக ஆறு வார காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 33 பிணைக் கைதிகள், ஹமாஸால் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். காசாவின் மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் கிழக்கு நோக்கி பின்வாங்கும். காசா மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் முழுமையாக பின்வாங்க வேண்டும், காசாவில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் போன்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை 16-வது நாளில் தொடங்கும். மூன்றாவது மற்றும் கடைசி கட்டத்தில், அனைத்து பிணைக் கைதிகளின் உடல்களைத் திரும்பப் பெறுவது, காசாவில் மறுகட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவை அடங்கும். இதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும்.

வரவேற்கத் தயாரகும் இஸ்ரேல்: இதனிடையே, ஓர் ஆண்டுக்கும் மேலாக காசாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகள் எவ்வாறு இருக்கிறார்கள், யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்கள் என்ற எந்தவிதமான தகவல்களும் வெளியாகாத நிலையில், ஹமாஸால் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளை வரவேற்க இஸ்ரேல் ராணுவமும் பிணைக் கைதிகளின் உறவினர்களும் தயாராகி வருகிறார்கள்.

வீடு திரும்பும் நம்பிக்கையில் காசாவாசிகள்: இதனிடைய இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காசாவிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிக்கும் காசாவாசிகள், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி இருக்கும் இந்த வேளையில் தங்களால் தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “கடவுளின் பெயரால் இன்றுதான் போரின் கடைசி நாள் என்று நாங்கள் நம்புகிறோம். என்றாலும் இந்தப் போர் நிறுத்தம் தொடராமலும் போகலாம் என்ற அச்சமும் உள்ளது. ஆனாலும் எந்த விதிமீறல்களும் இருக்காது என்றும் நம்புகிறோம். காசா மக்கள் சோர்வாகவும் பட்டினியாகவும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் யாரோ இறந்தோ, காயம்பட்டோ, கைது செய்யப்பட்டோ இருக்கிறார்கள். காசா மக்கள் நிறைய துன்பத்தை அனுபவித்து விட்டார்கள்.

இந்தப் போர் நிறுத்தம் உண்மையானது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அங்கு சென்று எங்கள் குடும்பத்தினர், நண்பர்களை காணவேண்டும்” என்று காசாவாசிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.