பொங்கல் விடுமுறை நிறைவு: ஜிஎஸ்டி சாலை நெரிசலை தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்!

தாம்பரம்: பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனையடுத்து நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகர ஆணையராக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், 18.1.2025 மற்றும் 19.1 2025 தேதிகளில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி பஸ்கள் இயங்க கீழ்க்காணும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்:

கனரக வாகனங்கள் தடை: சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையை பயன்படுத்தி ஒரகடம் வழியாக பயணிக்க வேண்டும். சிங்கப்பெருமாள் கோவில் வழியாக திருப்பி, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும். திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் திருப்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.

மேலும், ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர், மற்றும் ஈசிஆர் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு ஜனவரி 18 மதியம் 2 மணி முதல் ஜனவரி 20 மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே, பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகர், பொத்தேரி, மற்றும் காட்டாங்ககொளத்தூர் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

பல்லாவரம் புதிய பாலத்தில் ஒருவழி போக்குவரத்து தேவையான சமயங்களில், ஜனவரி 18 மதியம் 2 மணி முதல் ஜனவரி 20 மதியம் 12 மணி வரை, பல்லாவரம் புதிய பாலத்தில் சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும்.

வெளி வட்ட சாலை (ORR) வழியாக திருப்பி விடுதல்: ஜிஎஸ்டி ரோட்டில் போக்குவரத்தை விரைவுபடுத்த, ஓம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பப்படும். மேலும், முடிச்சூர் சாலை சந்திப்பில், மற்ற வாகனங்களையும் தேவையானபோது வெளிவட்ட சாலை தாம்பரம் நோக்கி திருப்ப வாய்ப்புள்ளது, இதன் மூலம் போக்குவரத்து எளிதாக்கப்படும்.

சென்னை நகருக்குள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பை நல்கும் படி தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடரும் ஆக்கிரமிப்புகள்: பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சாலையின் இரு பக்கத்திலும் சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியது. ஆனால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. போலீஸாரின் தொடர் கண்காணிப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் எந்தப் பயனும் இல்லை. மீண்டும் கடை உரிமையாளர்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.