சென்னை: பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ என்ற ஆவணப்படம், யூ-டியூபில் இன்று மாலை வெளியாகிறது.
மகாகவி பாரதியார் பற்றி பலரும் அறியாத, அவரது ஆன்மிக பரிமாணத்தை காட்டும் வகையில் ‘சக்திதாசன் – கடவுளை கண்டகவிஞன்’ என்ற ஆவணப்படத்தை சவுந்தர்யா சுகுமார் தயாரித்துள்ளார். உஷா ராஜேஸ்வரி இயக்கி உள்ளார். பாரதியாரின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி கதை எழுதியுள்ளார். ராஜ்குமார் பாரதி இசையமைத்து, எம்.வி.ஆனந்த் தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதியாராக கார்த்திக் கோபிநாத் நடித்துள்ளார். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.
பாரதியின் சிந்தனையை இந்திய சுதந்திர போராட்டம் எப்படி வடிவமைத்தது, அவருக்குள் உறங்கி கிடந்த ஆன்மிக உணர்வை எந்த நிகழ்வு தட்டி எழுப்பியது, தன் கடமைகள், கனவுகளை அவர் எப்படி கையாண்டார், இளமைக் காலத்தில் நடந்த எந்த சம்பவம் அவரை புதுமை சிந்தனையாளராக மாற்றியது, அவரது அரசியல் மற்றும் ஆன்மிக வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை செலுத்திய ஆளுமைகள் யார், இன்றைய சூழலிலும் அவரது கருத்துகள் பொருத்தமாக இருப்பது எப்படி என்ற பல கேள்விகளுக்கான பதில்களை, அழகான காட்சிகள், இனிமையான பாடல்களுடன் தொய்வின்றி சீரான நடையில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சவுந்தர்யா சுகுமார் கூறியதாவது: சகோதரி நிவேதிதா தேவியை பாரதி எப்போது சந்தித்தார் என்ற கேள்விதான் பாரதியின் ஆன்மிகபரிமாணம் பற்றி நான் அறிவதற்கான தூண்டுதலாக அமைந்தது. அதன் விளைவாக மேற்கொண்ட தொடர் தேடல்களின் முடிவுதான் ‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ எனும் ஆவணப்படம். பாரதியின் ஆன்மிக அடையாளம் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. அந்த பெருங்குறையை இந்த ஆவணப்படம் தீர்த்து வைக்கும். பாரதியின் ஆன்மிக பார்வையை இப்படம் முழுமையாக பேசும். இவ்வாறு சவுந்தர்யா சுகுமார் கூறினார்.
இணைய இணைப்பு: சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், ‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ ஆவணப்படம் யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்படுகிறது. https://www.youtube.com/watch?v=CRWRDPyfDVY என்ற லிங்க் மூலமாகவும், அருகே கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு குறியீட்டை ஸ்கேன் செய்தும் யூ-டியூபில் இப்படத்தை காணலாம்.