மும்பை: கோல்ட்ப்ளேயின் முன்னணி பாடகரான கிறிஸ் மார்ட்டின் மும்பையில் நடக்க இருக்கும் தனது நிகழ்ச்சிக்கு முன்பாக, தனது காதலியும், ஹாலிவுட் நடிகையுமான டகோடா ஜான்சனுடன் அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மும்பையில் இருக்கும் ஸ்ரீபாபுல்நாத் கோயிலில் அவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்யும் வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
47 வயதான கிறிஸ் பாரம்பரிய முறைப்படி குர்தா அணிந்திருந்தார். இந்திய கலாச்சராத்தை பிரதிபலிக்கும் படி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். நடிகை டகோடா எளிமையான பிரிண்டட் ஆடை அணிந்திருந்தார். தனது தலையை முக்காடிட்டு மறைத்திருந்தார். சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் ஒன்றில், நடிகை டகோடா சிவ வழிப்பாட்டு முறைப்படி நந்தியின் காதில் வேண்டுதலைப் பகிர்ந்து சாமி தரிசனம் செய்தார்.
கிறிஸ் மார்ட்டின், டகோடா இணைந்து சாமி தரிசனம் செய்ய வந்திருப்பது, அவர்கள் பிரியப்போகிறார்கள் என்று 2024 முதல் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. கடந்த 2017-ம் முதல் இந்த ஜோடி காதலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் மார்ட்டின், அவரது இசைக்குழுவான கோல்ட்ப்ளேவின் உலக சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த இந்த இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, மும்பையின் நவி மும்பையிலுள்ள டிஒய் பாடீல் மைதானத்தில் ஜன.18,19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.
முன்னதாக, கிறிஸ் மற்றும் டகோடா ஜான்சன் இருவரும் இணைந்து சுற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டன. கிறிஸ் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்பு, டகோடாவுடன் ஒன்றாக உலா வருகின்றனர். இதுகுறித்து ஹாலிவுட் நடிகை கூறும்போது, தனக்கு வேலை இல்லாத போது கிறிஸுடன் ஊர் சுற்றுவதை தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார். கிறிஸும் பேட்டி ஒன்றின் போது டகோடாவை சிறந்த நண்பர் என்று அழைத்திருந்தார்.
மும்பை நிகழ்ச்சியை முடித்தும், கோல்ட்ப்ளே குழு அடுத்து அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சி நடத்துகிறது.