மேற்கு வங்காளம்: பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் இன்று தீர்ப்பு; பெண் டாக்டரின் தந்தை கூறுவது என்ன…?

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.

எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ந்தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.

பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.

பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட்டு வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்து இருக்கிறது.

இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து கோர்ட்டின் வாசல் கதவை தட்டுவோம் என கூறியுள்ள பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், மரபணு பரிசோதனை அறிக்கையில், ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என குறிப்பிடப்படவில்லை.

சம்பவத்தின்போது, 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், நாங்கள் சற்று ஆறுதலாக உணர்வோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து கோர்ட்டின் கதவை தட்டுவோம். நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் கோருவோம் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்தி என்ற கேள்விக்கே இடமில்லை. ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முன் பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.

கோர்ட்டிடம் இருந்து நாங்கள் பதில்களை கேட்டிருக்கிறோம். சி.பி.ஐ.யிடம் இருந்து நாங்கள் பதில்களை கேட்கவில்லை. ஆனால், அனைத்து பொறுப்புகளையும் சி.பி.ஐ. அமைப்பிடம் கோர்ட்டு ஒப்படைத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, 2 மாதங்களில் அனைத்து சான்றுகளையும் கோர்ட்டு மறுஆய்வு செய்துள்ளது. முறையான தண்டனை எதுவென்று கோர்ட்டே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் சட்ட மந்திரி ஆகியோருக்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம் என கூறியுள்ள அவர், ஆனால் அதற்கு இதுவரை அவர்களிடம் இருந்து பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.