இஸ்லாமாபாத்: மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு சஹாரா, மொராக்கோ நாடுகள் வழியாக ஐரோப்பாவின் ஸ்பெயினுக்குள் பலர் சட்டவிரோதமாக நுழைவதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்த நாடுகளில் பல்வேறு சட்டவிரோத தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் மூலம் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் குடியேறுகின்றனர்.
ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துவிட்டதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான ‘வாக்கிங் பார்டர்ஸ்’ தெரிவித்துள்ளது. கடந்த 2-ம் தேதி இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கியதாகவும் வாக்கிங் பார்டர்ஸ் கூறியுள்ளது.
இதையடுத்து, படகு கவிழ்ந்து உயிரிழந்த பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படகில் இருந்த அனைத்து பாகிஸ்தானியர்களும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், உயிர் பிழைத்தவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 6 பேர் கொண்ட விசாரணைக் குழு மொராக்கோவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொராக்கோ தலைநகர் ரபாத் மற்றும் தக்லாவுக்கு அதிகாரிகள் சென்று, நிலைமையை மதிப்பிட்டு விரிவான அறிக்கையை பிரதமரிடம் வழங்குவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.