பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் இன்று (ஜன.18) நடைபெற்றது. இதில், கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டு வர உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக செயற்குழு, தேஜஸ்வி யாதவை கட்சியின் தலைவராக நியமித்தது. தற்போது கட்சியின் தந்தையாக அவரது தந்தை லாலு பிரசாத் உள்ளார். கட்சிக்கு உள்ளும் வெளியிலும் தேஜஸ்வி யாதவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “பிஹாரின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் நாங்கள் ஆழமாக விவாதிப்போம். இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. 2025 தேர்தலில் ஆர்ஜேடியின் வெற்றிக்கு கட்சி முழுமையாக தயாராக உள்ளது. எங்களின் ஒவ்வொரு முடிவும் முக்கியமானதாக இருக்கும். அமைப்பு மற்றும் தேர்தல்கள் குறித்த எங்கள் உத்தி மிகவும் உறுதியானதாக இருக்கும். ஆர்ஜேடி எந்த திசையில் நகர்கிறது என்பதை நாங்கள் நாட்டுக்கு காண்பிப்போம்” என தெரிவித்திருந்தார்.