காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியை அவரின் பாதுகாப்பு கருதி திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனை எதிர்த்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை வரும் ஜனவரி 20-ம் தேதி சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவர் சந்திப்பு நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக இழுபறி ஏற்பட்டுள்ளது.
போலீஸார் விஜய்யின் பாதுகாப்பு கருதி அவரது சந்திப்பு நிகழ்ச்சியை ஏகனாபுரத்துக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் சுப்பிரமணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் விஜய்யை சந்திக்க வருவர். அனைவரும் திருமண மண்டபத்துக்கு வருவதிலும், அழைத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.
எனவே ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் உயரதிகாரிகளிடம் போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.