ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் விண்ணில் ஏவுப்பட்ட 8-வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. அதன் பூஸ்டர் வெற்றிகரமாக ஏவுதளம் திரும்பியது.
தொலைதூர கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ‘ஸ்டார்ஷிப் ’ என்ற மெகா ராக்கெட்டை விண்ணில் ஏவும் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட முதல் பரிசோதனை வெற்றி பெற்றது. நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தோல்வியடைந்தது. இதன் 7-வது பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தின் போகா சிகா பகுதியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் தளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் ஏவப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டு சென்றது. விண்வெளியை நெருங்கியதும் ராக்கெட் அடிப்பகுதியான பூஸ்டர், வெற்றிகரமாக பிரிந்து மீண்டும் ஏவுதளத்துக்கு வந்து ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் இரும்பு கைகளில் வந்து நின்றது.
ஆனால் ராக்கெட் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஆளில்லா விண்கலம், 8.5 நிமிடங்கள் விண்ணில் பறந்து 146 கி.மீ உயரத்தில் மணிக்கு 21,317 கி.மீ வேகத்தில் சென்றபோது வெடித்துச் சிதறியது. இதன் பாகங்கள் மீண்டும் பூமிக்குள் நுழைந்தபோது தீப்பிடித்து எரிந்தன. அட்லாண்டிக் கடலின் துர்க்ஸ் மற்றும் காய்காய்ஸ் தீவுகள் அருகே ஸ்டார்ஷிப் ராக்கெட் பாகங்கள் எரிந்து விழுந்தன.
இதையடுத்து அட்லாண்டிக் கடல் பகுதியில் ராக்கெட் பாகங்கள் விழும் பகுதி வழியாக சென்ற விமானங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஃபெடரல் விமானபோக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் வெடித்துச் சிதறியதற்கு என்ஜினுக்கு மேலே உள்ள பள்ளத்தில் ஆக்ஸிஜன் எரிபொருள் கசிவு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த குறைபாடு அடுத்த முயற்சியில் சரிசெய்யப்படும் என அவர் தெரிவித்தள்ளார். ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறிய படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட எலான் மஸ்க், ‘‘ வெற்றி உறுதி இல்லாதது. ஆனால், பொழுதுபோக்குக்கு உத்திரவாதம்’’ என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.