Dinesh Karthik | இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய டி20 அணியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்தப் பதவியில் இருந்து பாண்டியாவை நீக்குவதற்கு எந்த தர்க்கரீதியான காரணமும் இல்லை என்று கார்த்திக் கூறியுள்ளார். 2024 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாகக் கருதப்பட்டார். ஆனால் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் சூர்யகுமார் யாதவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தனர். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக கூட நியமிக்கப்படவில்லை.
இந்திய அணியின் துணை கேப்டன்
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அக்சர் படேல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ எடுத்த இந்த முடிவு தினேஷ் கார்த்திக்கை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா சாதனை
2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்தார். அவர் 16 போட்டிகளில் அணியை வழிநடத்தியதில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2024 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, ரோகித் சர்மா ஓய்வுக்குப் பிறகு கேப்டனாக ஆவதற்கு ஹர்திக் பாண்டியா முன்னணியில் இருந்தார். ஆனால் அவரை அஜித் அகர்கர் கேப்டனாக்க விரும்பவில்லை.
அகர்கர் கொடுத்த விளக்கம்
இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பேசும்போது, சூர்யகுமாரைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கினார். அணிக்கு ஒரு வீரரின் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என கூறினார். ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர் அணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என பாராட்டினார்.