சிட்னியில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினார். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதற்கிடையில் நடைபெற உள்ள ரஞ்சிக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் ரஞ்சித் தொடரில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததிலிருந்து விராட் கோலிக்கு கழுத்துப்பகுதியில் அதிக வலி இருப்பதாகவும், இதனால் அவர் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே ராஜ்கோட்டில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. மறுபுறம் பெங்களூரில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி தொடரில் கர்நாடக அணிக்காக கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது, அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மும்பையில் இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். ரோஹித் சர்மா விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
பிசிசிஐ புதிய விதிகள்
சமீபத்தில் இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருந்தால் நிர்வாகத்திடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இது தவிர மேலும் பல விதிகள் இந்திய அணியின் வீரர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது. தொடர் நடைபெறும் போது மனைவிகளை உடன் கூட்டி வர கூடாது, அனைவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்க வேண்டும், தனிப்பட்ட வாகனங்களில் வர கூடாது போன்ற விதிகள் விதிக்கப்பட்டு உள்ளது.
கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி
கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி தொடரில் விளையாடவில்லை என்றாலும், ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கும் இறுதி சுற்றில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. இருப்பிடம் பிப்ரவரி 6ம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடர் தொடங்குவதால் அதற்கான பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெறும் வீரர்கள் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெறுவார்கள். எனவே இந்த முறை ரஞ்சித் தொடரில் சீனியர் வீரர்கள் இடம்பெறுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சீனியர் வீரர்கள் விளையாடவில்லை என்றாலும் இளம் வீரர்கள் அவர்களின் மாநில அணிக்காக விளையாட உள்ளனர். ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், ஷுப்மான் கில் பஞ்சாப் அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணிக்காகவும் விளையாட உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெரும் வீரர்கள் ரஞ்சி தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் படிங்க: நாடாளுமன்ற எம்.பி.யுடன் கரம் பிடிக்கிறாரா ரிங்கு சிங்? யார் அந்த பிரியா சரோஜ் எம்.பி.?