புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாகவும், 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்ததாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் போராட்டதால், அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் வங்கதேச நீதிமன்றம், ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த 15 ஆண்டு பதவி காலத்தில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்தார் எனவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஷேக் ஷசீனாவை ஒப்படைக்க கோரி இந்தியாவிடம் முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை இந்தியா நீட்டித்தது. ஆனால் அவரது பாஸ்போர்ட்டை வங்கசேத இடைக்கால அரசு ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் முகநூல் பக்கத்தில் ஷேக் ஷசீனா வெளியிட்ட ஆடியோ தகவலில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நானும், எனது சகோதரி ரெஹானாவும் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தோம். எங்களை கொல்ல அரசியல் எதிரிகள் சதி செய்தனர். நான் இதற்கு முன் பல தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளேன். இறைவன் அருளால் நான் உயிருடன் உள்ளேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமென்று இறைவன் விரும்புகிறார். இவ்வாறு ஷேக் ஹசீனா உருக்கமாக கூறியுள்ளார்.