உறையும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகள், உறவினர்கள் தூங்கும் நிலை உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அண்மைக் காலமாக காய்கறி விற்பனையாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். மேலும், அவர்களைச் சந்தித்து உரையாடிய விவரங்களையும், அதற்கான வீடியோ பதிவையும் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள சாலைகள், நடைபாதைகள், சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
பின்னர் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியதாவது: நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.
உறைய வைக்கும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது.
சுரங்கப்பாதைகளில் படுத்து தூங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் இன்றைய டெல்லி எய்ம்ஸின் உண்மை நிலை. இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார்.
மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன. இவ்வாறு ராகுல் காந்தி அதில் கூறியுள்ளார்.