கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (64). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார், ஸ்டீபனும் அவரது மனைவி விஜயகுமாரியும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 8-ம் தேதி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரி உடனடியாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஸ்டீபனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் தரையில் விழுந்து இறந்திருக்கலாம் எனக்கருதி, மர்மமான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேதபரிசோதனையில் ஸ்டீபனின் கழுத்து இறுக்கப்பட்டும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மர்ம மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீஸார் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி(43), திருநெல்வேலி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜன்(25) ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்கு ஜோதிடர் ஜான்ஸ்டீபனிடம் சென்றுள்ளார். சில பரிகாரங்கள் செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கூறியதாக தெரிகிறது. அதற்காக ஜான் ஸ்டீபன் சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தின் அடிப்படையில் பரிகாரங்கள் செய்த பின்பும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகரித்துள்ளது. இதுபற்றி ஜோதிடர் ஜான் ஸ்டீபனிடம் கலையரசி தெரிவித்துள்ளார். மேலும், பரிகாரத்துக்காக கொடுத்த 9.5 லட்சம் ரூபாயை ஜோதிடர் ஜான் ஸ்டீபனிடம் திருப்பிக் கேட்டுள்ளார் கலையரசி.
ஜோதிடர் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிடர் ஜான் ஸ்டீபனை கொலைச் செய்ய கலையரசி முடிவு செய்துள்ளார். அதற்காக தனது முகநூலில் நட்பாக பழகிய நெல்லை மாவட்டம் கருவேலகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜனை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். ஜோதிடரை கொலைச் செய்ய நம்பிராஜனுக்கு கலையரசி பணமும் கொடுத்துள்ளார். கடந்த 8-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை கலையரசியும், நம்பிராஜனும் சேர்ந்து கழுத்தை தூண்டடால் இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்” என்றனர்.