மதுரை: சாட்டையடியை சந்தேகித்தால் திமுக அமைச்சர்கள் எனது வீட்டுக்கு வந்து இரண்டு முறை அடித்துக் கொள்ளட்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த பாஜக விவசாய அணி நிர்வாகி முத்துராமன் என்பவரின் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அறநிலையத்துறை இருக்காது. மீனாட்சி அம்மன் கோயில் நடை பாதையில் நடந்தால் மக்கள் எவ்வளவு கோபத்தில் உள்ளனர் என்பது முதல்வருக்கு தெரிந்து விடும். அறநிலைத்துறையை அகற்றுவோம் என்று கூறுகிறோம். அதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளப் போகின்றனர் என்று பார்ப்போம்.
பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது, முதல்வர் போட்டி போட்டுக்கொண்டு கை கொடுக்கிறார். அந்த கை குலுக்கல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அரசின் மீது இருக்கும் வெறுப்பை மறைக்க ஆளுநரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். பதவி என்பது வெங்காயம் போல உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது.
சாட்டை குறித்து சந்தேகிக்கும் திமுக அமைச்சர்கள் எனது வீட்டிற்கு வரலாம். அவர்கள் சாட்டையை எடுத்து ஆறு அடி அல்ல, இரண்டு அடி அடித்தால் தெரியும் அது பஞ்சில் ஆனதா அல்லது வேறு எதுவுமா என!.
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் நம்பர் ஒன் டாஸ்மாக் தான். 24 மணி நேரமும் செயல்படும் மதுபானக் கடைகளை நான் காட்டுகிறேன். தமிழகத்தை அதலபாதாளம் நோக்கி எடுத்துச் செல்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாநகர் பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருடனிந்தனர்.