சென்னையை போல் புதுச்சேரியிலும் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: நடவடிக்கை எடுக்காத வனத்துறை

புதுச்சேரி: சென்னையைபோல் புதுச்சேரியிலும் மீனவ கிராமங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி வனத்துறை கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களாக சென்னை கடற்கரை பகுதிகளில் திடீரென நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. கடலில் ஏற்பட்ட நீரோட்டம் மாற்றம் காரணமாக, இந்த ஆமைகள் ஆந்திர கடல் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வனத்துறை இறந்த ஆமைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் 32 கிலோ மீட்டர் தொலைவு கடற்கரைப் பகுதியில் 18 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி காலாப்பட்டு தொடங்கி பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட பல்வேறு கடற்பகுதிகளில் ஆமைகள் கரைகளில் வந்து முட்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இக்கால கட்டத்தில் அவை பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி இறந்தும் வருகின்றன.

இந்தநிலையில், பனித்திட்டு, நல்லவாடு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கிய நிலையில், இறந்துள்ளதாக அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

பல மீனவ கிராமங்களில் இறந்த நிலையில் 25 க்கும் மேற்பட்ட ஆமைகள் கடற்கரை மணலில் கிடப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆமைகள் ஏராளமாக கடற்கரையில் இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லைஎன்றும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இறந்த ஆமைகள் 20 கிலோ எடைக்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகள் இறப்பை உரிய முறையில் ஆய்வுக்கு உட்படுத்த கோருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.