டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்கிறது. இதனால் 130 விமானங்கள் மற்றும் 27 ரயில்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன.
தலைநகர் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிமூட்டம் தொடர்கிறது. இதனால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 130 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான சேவையில் தாமதம் ஏற்படுவதால் அது தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இன்டிகோ விமான நிறுவனம் தங்கள் பயணிகளுக்கு நேற்று வழங்கிய அறிவுறுத்தலில், “அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே விமான நிலையம் வருவதற்கு முன் உங்கள் விமானத்துக்கான நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தது.
இதுபோல் நேற்று டெல்லிக்கு 27 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள கூறினர். இதற்கிடையில் டெல்லியில் நேற்று காலை காற்றின் தரக்குறியீடு 294 (மோசம்) ஆக இருந்தது.
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு மிக மோசமான அளவுக்கு சென்றதால் கிராப்-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது முதல் டெல்லியில் கிராப்-3 அல்லது கிராப்-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் வாபஸ் பெறப்படுவதுமாக உள்ளது.